பொள்ளாச்சியில் பலவருடங்களாக இளம் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரினால் அம்பலமானது. இதன்பேரில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகின்றேன். என்னுடைய பள்ளி தோழி அறிமுகம் செய்ததின் மூலம் மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசு, ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜன் ஆகியோரை எனக்கு தெரியும். அவர்கள் 2 பேரும் என்னிடம் செல்போனில் பேசுவார்கள். அண்ணன் வயதில் இருப்பதால் நானும் சபரிராஜனிடமும், திருநாவுக்கரசிடமும் நட்பு ரீதியில் பேசினேன். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு நான் கல்லூரியில் இருந்த போது, சபரிராஜன் எனக்கு போன் செய்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு வா என்று சொன்னான்.
நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து பஸ் ஏறி ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அங்கு ஒரு பேக்கரி முன் சில்வர் கலர் வோக்ஸ்வேகன் காரை நிறுத்தி கொண்டு சபரிராஜனும், திருநாவுக்கரசும் இருந்தனர். நான் அவங்க பக்கத்தில் போனதும் சபரிராஜன் காரில் போய்கிட்டே பேசலாம் என்று சொன்னான். நானும் காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டேன். சபரிராஜன் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். காரை திருநாவுக்கரசு ஸ்டார்ட் செய்த போது 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் திருநாவுக்கரசுக்கு இடதுபுற சீட்டிலும், இன்னொருவர் பின் சீட்டில் சபரிராஜன் பக்கத்திலும்அமர்ந்தனர்.
நான் சபரிராஜனிடம் இவங்க 2 பேரும் யார்? என்று கேட்ட போது, கடை வீதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சதீஷ் எனவும், பின் சீட்டில் இருந்தவர் பக்கோதிபாளையம் வசந்தகுமார் எனவும் சொன்னான். பின்னர் திருநாவுக்கரசு தாராபுரம் ரோட்டில் சிறிது தூரம் காரை ஓட்டி சென்ற போது, நான் சபரிராஜனிடம் ஏதோ பேசணும் என்று சொன்னியே என்ன பேசணும் என கேட்ட போது, திடீரென்று திருநாவுக்கரசு காரை நிறுத்தினான்.
அப்போது எனது விருப்பம் இல்லாமல் சபரிராஜன் எனது மேலாடையை கழற்றினான். நான் சுதாகரித்து தடுப்பதற்குள் முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த சதீஷ் அவனது செல்போனில், என்னை மேலாடை கழன்ற கோலத்தில் வீடியோ எடுத்து விட்டான். இதனால் நான் பதறிபோய் செல்போனை தட்டி விட்டு என்னடா பண்றீங்க என்று சத்தம் போட்டேன். அப்போது அவங்க 4 பேரும் சேர்ந்து, நீ மேலாடை இல்லாமல் இருப்பதை வீடியோ எடுத்து விட்டோம். அதனால் நீ நாங்க எப்ப கூப்பிட்டாலும் எங்க கூட வந்து எங்களுடன் சந்தோஷமாக இருக்கணும். நாங்க அவ்வப்போது கேட்கிற பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கணும்இதை வெளியில் சொன்னால் இப்ப எடுத்த உன் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவோம் என மிரட்டினார்கள். அப்போது என்னிடம் பணம் இல்லை என்று, சொன்ன போது சபரிராஜன் பணம் இல்லைன்னா என்ன கழுத்தில் போட்டு இருக்கிற நகையை கழற்றி கொடு என்று மிரட்டினான். நான் நகையை கொடுக்க மறுத்து கழுத்தை மறைத்த போது சபரிராஜனும், திருநாவுக்கரசும், வசந்தகுமாரும் என் இரு கைகளையும் இழுத்து பிடிக்க சதீஷ் நான் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை பறித்து கொண்டான்.
இதனால் மனவேதனை அடைந்த நான் கதறி அழுத போது என்னை அங்கேயே இறக்கி விட்டு விட்டு அவங்க 4 பேரும் காரை எடுத்து கொண்டு சென்று விட்டார்கள். நான் அழுது கொண்டு நிற்பதை பார்த்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என் அருகில் வந்து எதுக்கு அழுகிறாய் என்றனர். பின்னர் என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டார்கள். அதில் கல்லூரி வந்தேன். பின்னர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றேன். இது வீட்டிற்கு தெரிந்தால் அவமானமாகி விடும் என்று நினைத்து என் வீட்டில் சொல்லாமல் இருந்தேன்.
இந்த நிலையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் அடிக்கடி என்னை நேரில் பார்த்து செலவுக்கு பணம் கொடுக்கிறாயா?இல்லை உன் ஆபாச படத்தை இணைய தளத்தில் போடவா என்று மிரட்டினார்கள். அதனால் நான் நடந்த உண்மைகளை எனது பெற்றோரிடம் 24-ந்தேதி சொல்லி விட்டேன். எனது அப்பாவும், அண்ணனும் புகார் கொடுக்க முடிவு செய்தனர். என்னை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று எனது விருப்பம் இல்லாமல் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து என்னை மிரட்டி நான் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து சென்ற திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments