பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைய விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பார் நாகராஜ் வால்பாறை சாலையில் உள்ள மதுக்குடிப்பகம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நாகராஜ் நடத்தி வருகிறார். இவர் நடத்திவரும் மதுக்குடிப்பகத்தை இன்று இளைஞர்கள் சூறையாடினர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மிரட்டப்பட்டு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கில், புகார் கொடுத்தவர்களின் உறவினர்களை நாகராஜ் மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இந்தப் புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அந்த மதுக்குடிப்பகத்துக்கு இளைஞர்களும், ஊர் பொதுமக்களும் சென்றனர். ஆவேசத்துடன் இருந்த அவர்கள், மது அருந்திக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றி விட்டு சூறையாடத் தொடங்கினர்.
இருக்கைகள், மேசைகள் அனைத்தும் வீசி எறிந்த அவர்கள், குளிர்சாதனப் பெட்டியையும் அடித்து நொறுக்கினர்.
இதைக் கண்ட மதுக்கடை ஊழியர்கள், உடனடியாக கடையை இழுத்து மூடினர். பின்னர், இளைஞர்களும், பொதுமக்களும், பார் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாகராஜை விட மாட்டோம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
0 Comments