Tamil Sanjikai

10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலையை சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மனூஸ், வளர்மதி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நில உரிமையாளர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 8 வழி சாலைக்கு எதிராக பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழி சாலைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை எதிர்த்து போராடிய போது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர் காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.

அப்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொது மக்களை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் விரைவில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு போலீஸ் தன்னை தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுத்தார். அந்த புகாரில் செங்கம் கரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி எனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது செங்கம் டி.எஸ்.பி.யாக இருந்த சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் 8 வழி சாலைக்கு எதிராக போராடியதாக கூறி என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். என் மீது பொய் வழக்கும் போட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி ஆகிய 3 பேரும் டிசம்பர் மாதம் 12-ம் தேதி மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment