Tamil Sanjikai

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுக்கு பின் உருளைக்கிழங்கு அறுவடையில் உழவு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் விலை உயர்வால் அதிகமாகும் டிராக்டர் வாடகை காரணமாக நவீன இயந்திரங்களை விவசாயிகள் தற்போது தவிர்க்க தொடங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி காய்கறி தோட்டங்களில் உழவு செய்வதற்காகவே உழவு மாடுகள் வளர்க்கப்பட்டன. விவசாயிகள் அவர்களது தோட்டங்களில் உழவு பணிகளை மேற்கொள்ள மாடுகளை பயன்படுத்தினர். ஆனால், நவீனப் போக்கில் டிராக்டர் மற்றும் டிரில்லர் போன்ற இயந்திரங்கள் வந்ததால், கிராமப்புறங்களில் மாட்டு வண்டிகள், விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்த உழவு மாடுகள் பெருமளவில் குறைந்தது. விவசாயிகள் உழவு மாடுகளை வளர்ப்பதை குறைத்துக் கொண்டனர். கடந்த சில ஆடுகளாக நீலகிரி மாவட்ட தோட்டங்களில் உழவு மாடுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது டீசல் விலை உயர்வால், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிரில்லர் மற்றும் டிராக்டர் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் விவசாயிகள் உழவு மாடுகளை வாடகைக்கு எடுத்து காய்கறி உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, உருளைக்கிழங்கு அறுவடையில் அதிகளவு உழவு மாடுகள் பயன்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் எங்கும் உழவு மாடுகள் இல்லாத நிலையில், தற்போது கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து உழவு மாடுகள் அழைத்து வரப்படுகின்றன. இதற்கு ஒரு நாளுக்கு 2 ஆயிரம் வாடகையாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகள் 10 ஆட்கள் நான்கு நாட்கள் செய்யும் வேலையை ஒரே நாளில் முடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அறுவடை காலம் குறைவது மட்டுமின்றி, செலவும் மிகவும் குறைவு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

0 Comments

Write A Comment