Tamil Sanjikai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டகாரர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜூணன் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மேலும் அவர்கள் மீது குற்றச்சதி, சட்டத்தை மதிக்காத அரசு ஊழியர்கள், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை உருவாக்குதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு தடை கோரி கதிரேசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். எனினும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 Comments

Write A Comment