Tamil Sanjikai

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு புகுந்து தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

மத்திய அரசின் பொருளாதார பின்னடைவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் தனி மாநில அந்தஸ்தை நீக்கியது போன்ற காரணங்களுக்கு விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் இன்று மாலை 5 மணி அளவில் மரவனேரியல் உள்ள சேலம் மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் வந்து விளக்கம் கேட்க உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, இன்று மாலை 5 மணி அளவில் பியூஸ் மனுஷ் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு வந்து அங்கு இருந்த நிர்வாகிகளை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பினார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்கள் உடனே அங்கு விரைந்து வந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்த பியூஸ் மனுஷை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அஸ்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்குள் பியூஸ் மனுஷ் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்து ரகளை செய்து நிர்வாகிகளை தாக்கியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்தனர். இதன்மீது விசாரிக்க மாநகர போலீஸ் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment