சென்னை அருகே அம்பத்தூர் தொழிற்பேட்டையில், கலப்பட பெட்ரோல் விற்பனை செய்த பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், வாகன ஓட்டிகள் இன்று பெட்ரோல் நிரப்பினர். ஆனால், பெட்ரோல் நிரப்பிய சிறிது நேரத்தில், வாகனங்கள் பழுதாகி நடுரோட்டில் நின்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குக்கு திரண்டு வந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், பெட்ரோலிய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பெட்ரோல் பங்குக்கு வந்த அதிகாரிகள், பெட்ரோல் குழாய்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்தனர். இதில், பெட்ரோலில் மெத்தனால் கலந்து இருந்தது தெரியவந்தது.
பின்னர் அங்கு கூடியிருந்த 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சென்னை அருகேயுள்ள ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில், இதுபோன்று கலப்பட பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments