Tamil Sanjikai

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில், "நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

எனவே தான் இதுவரை வகுத்து வந்த, நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழகம் 45 ஆயிரத்து 119 கோடி கடனில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தலை நடத்துவது என்பதே அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு காரணமான எச்.வசந்தகுமாரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், எவ்வித பதிலும் இல்லை. எனவே, தேர்தல் செலவை வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

0 Comments

Write A Comment