Tamil Sanjikai

காய்ச்சல் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும், டெங்கு காய்ச்சல் குறித்து பேட்டியளித்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் டெங்கு காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ‘காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் உடனடியாக வரவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள மருந்தை கொடுக்காதீர்கள். காய்ச்சலுடன் நீர்ச்சத்து குறைந்தால் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள். காய்ச்சல் குணமானது போல் தெரிந்தாலும் 4 நாட்களில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். பிற இடங்களில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதியாக அரசு மருத்துவனைக்கு வரும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தால் டெங்குவை எளிதாக குணப்படுத்திவிட முடியும். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ரத்த பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம்’ என்றார்.

மேலும், நீட் தேர்வில் பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்த தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும். பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தினால் மட்டுமே ஆள்மாறாட்டத்தை தடுக்க முடியும். நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக அரசின் கொள்கை ஆகும்’ என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment