Tamil Sanjikai

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறை குறித்து அரசு மருத்துவக்குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.

கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (36) இவருக்கு காயத்ரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் கடந்த சில ஆண்டுகளாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பணிக்கு செல்லவில்லை. இதனால் தமிழ்ச்செல்வன் இரு மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, திருச்சி கே.கே.நகரில் உள்ள லைப் கேர் சென்டர் டிரஸ்ட் என்ற பெயரில் குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 28ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 1ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், உறவினர்கள் அவரது உடலை பெற்று வந்து இறுதி சடங்கு நடத்தினர். இறுதி சடங்கின்போது, தமிழ்ச்செல்வன் உடலில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் செய்வதறியாது ஊர்வழக்கப்படி உடலை உடனடியாக புதைத்துவிட்டனர். இதையடுத்து தமிழ்செல்வன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி 30க்கும் மேற்பட்ட உறவினர்கள் நேற்று மதியம் கே.கே.நகரில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 28 பேர் சங்கிலியால் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சோர்வுற்று மயங்கி கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போதை மறுவாழ்வு சிகிச்சை மைய நிர்வாகிகளிடம் இது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் உரிய பதில் கூற மறுத்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்ச்செல்வன் உறவினர்கள் திருச்சி கே.கேநகர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சிகிச்சை பெறும் அனைவரும் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்தனர். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் திடீரென இறந்துள்ளதாகவும், அதேபோன்று 10க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிகிச்சை மையத்தின் நிர்வாகிகளை தேடிவருகின்றனர். இந்நிலையில், சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் நிரஞ்சனா தலைமையிலான குழு கே.கே.நகர் போதை மறுவாழ்வு மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சையில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளனவா என ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிரஞ்சனா, இந்த மையத்தில் 26 பேரை தங்கவைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படவில்லை, 2 கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளது. 10ம் வகுப்பு படித்த எவ்வித பயிற்சியுமே இல்லாத ஒரு ஊழியர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கு பணியில் இருப்பதாக குறிப்பிடும் செவிலியரும் முறையாக வருவதில்லை. ஆய்வு தொடர்பான அறிக்கை மனநல இயக்குனரகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

0 Comments

Write A Comment