Tamil Sanjikai

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. நவம்பர் மாத இறுதி நாட்களில் பனிக்காலம் தொடங்கும். கடந்த கோடை சீசனையொட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கடந்த ஜூலை மாதம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. டெல்பீனியம், டேலியா, சால்வியா, பிகோனியா, போலியேஜ், ஜீன்னியா, சைக்ளோமன், அலீசம், கேலண்டூலா, பெனிஸ்டமன், இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, ஆஸ்டர், ஸ்வீட் வில்லியம், வெர்பினா, பால்சம் உள்பட 85 ரகங்களை சேர்ந்த 2½ லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடப்பட்டன.

ஜப்பான் பூங்கா, நியூ கார்டன், இலைப்பூங்கா, இத்தாலியன் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பாத்திகளில் நடவு செய்யப்பட்டன. மேலும் நடைபாதை ஓரங்களில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடப்பட்டு உள்ளன. தாவரவியல் பூங்காவின் இத்தாலியன் பூங்காவில் மேரிகோல்டு, சால்வியா மலர் செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் அவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கியதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதுதவிர 7 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளும் பூக்க ஆரம்பித்து விட்டன. இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரியவர், சிறியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு 40 ரூபாய் சிறியவர்களுக்கு 20 ரூபாய் என கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

0 Comments

Write A Comment