ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சிறிய புல் மைதானம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா தலமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், பூங்கா எப்பொதும் புதுப் பொலிவுடன் வைக்கப்படுவது வழக்கம். செப்டம்பர் மாதம் தொடங்கி இரு மாதங்கள் இரண்டாம் சீசன் கடை பிடிக்கப்பட்ட நிலையில், பூங்காவில் 2 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அதேபோல், 7 ஆயிரம் மலர் தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. புல் மைதானங்களும் பராமரிக்கப்பட்டு பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது.
இந்நிலையில், இரண்டாம் சீசன் முடிந்த நிலையில், மலர் அலங்காரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும், விதை சேகரிப்பு பணிகள் மற்றும் நாற்றுகள் உற்பத்தி ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் கோடை சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. புல் மைதானத்தில் உள்ள ஊசி புற்கள் அகற்றப்பட்டு தற்போது புல் மைதானத்தை சமன் செய்யும் பணிகள் நடந்து வந்த நிலையில், மழையால் அதிகளவு வளர்ந்திருந்த புற்கள் அகற்றப்பட்டு தற்போது சமன் செய்யும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக டிசம்பர் மாதம் பனி பொழிவு அதிகம் காணப்படும். இச்சமயங்களில் புற்கள் அதிகளவு வராது. ஆனால், இம்முறை தொடர்ந்து 5 மாதங்களாக மழை பெய்த நிலையில், பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் புற்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனால், பூங்கா பச்சை கம்ளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது.
0 Comments