Tamil Sanjikai

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால், அந்த ஆலையை மூட தூத்துக்குடியில் நடந்த போராட்டங்களின் பின்னணியில் நக்சலைட் அமைப்பினர் இருந்ததாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கூறப்பட்டதற்கு தமிழக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. ஆலையை மூடும் அதிகாரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டுமே உண்டு என்றும் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடப்பட்டது.

நவம்பர் மாதத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்றும் அந்த ஆலை உண்டாக்கும் மாசுபாடு குறித்த மக்களின் அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். தூத்துக்குடியில் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம் என்றும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு நிலைக்கக்கூடியதல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தை கேட்காமலேயே உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதனிடையே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி துப்பாக்கிச் சூடு தொடரான வழக்கை விசாரித்து வருவதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

0 Comments

Write A Comment