Tamil Sanjikai

சென்னையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்த, நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள ‘டெம்பிள் டவர்’ என்ற வணிக வளாகத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் Assure capital service என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் உரிமையாளராக சைதாப்பேட்டையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவரும், தொழில் கூட்டாளிகளாக ஷாகுல் ஹமீது, செல்வக்குமார் என்பவர்களும் செயல்பட்டு வந்தனர்.

புதிதாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு ஆன்லைனில் விளம்பரம் செய்த அவர்கள், ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொதுமக்கள் பணம் செலுத்தினால் 334 நாட்களில், பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய பலரும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட அந்நிறுவனத்திடம் பணம் செலுத்தியுள்ளனர். மேலும் தினந்தோறும் பணம் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கி அவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் இணைந்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டதோடு, நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது நிறுவனம் மூடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளித்தனர்.

அதில், 30க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் சுமார் 3 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஏமாற்றுதல், கூட்டாக சேர்ந்து சதியில் ஈடுபடுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இந்த மோசடி கும்பலின் தலைவனான பாலச்சந்தர், ராமாபுரம் கிரிநகரில் நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக நம்பிக்கை ஆவணம் மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆணையர் தனவேலுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார் பாலச்சந்தரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகள் ஷாகுல் ஹமீது, செல்வக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

நாடு தொழில்நுட்பத்தில் முன்னேறி வரும் நிலையில், இதுபோன்ற நபர்கள் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தியும், மக்களை மூளை சலவை செய்தும் மோசடி மன்னர்கள் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

0 Comments

Write A Comment