கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 30-ந் தேதி அதிகாலை வரை கோரத்தாண்டவம் ஆடிய ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏராளமான உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்பட்டன. அதில் இருந்து மக்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை. ஒகி புயல் தனது கோர முகத்தை காட்டி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு கடற்கரை கிராமங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம், கடல் ஆசீர்வதிப்பு நிகழ்ச்சி, கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம், கூட்டுத்திருப்பலி போன்றவை கடந்த 2 நாட்களாக நடந்தது.
தூத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் கடற்கரையில் ஜெபம் நடந்தது. நேற்று கூட்டுத்திருப்பலி மற்றும் ஊரைச்சுற்றி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் ஆகியவை நடந்தது.
தூத்தூர் நேதாஜி படிப்பகம் சார்பில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் ஒரு பகுதியில் ஒகி புயலில் நீரோடி, சின்னத்துறை, தூத்தூர், இரையுமன்துறை, இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறை, பூத்துறை, சின்னத்துறை, வள்ளவிளை பகுதிகளில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்களின் உருவப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்கள் மலர்களால் அலங்கரித்து நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு கடந்த 2 நாட்களாக தூத்தூர் மீனவ கிராம மக்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சின்னத்துறை மீனவ கிராமத்திலும் ஒகி புயலில் இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம், கடல் ஆசீர்வதிப்பு நிகழ்ச்சி, திருப்பலி ஆகியவை நடந்தது. சின்னத்துறை கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் ஒகி புயலில் இறந்த 40 பேரின் நினைவாக அவர்கள் அனைவரின் புகைப்படத்துடன் கூடிய ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த ஸ்தூபின் மேல் பகுதியில் ஒகி புயலின் கோரத்தை நினைவூட்டும் ஓவியம் மற்றும் ஒகி என ஆங்கிலத்தில் எழுதிய வார்த்தை மற்றும் 30-11-2017 என்ற தேதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்தூபி நேற்று திறந்து வைக்கப்பட்டு, அதற்கு மாலை அணிவிக்கப்பட்டது. சின்னத்துறை கிராம மக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் அந்த ஸ்தூபிக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினர். இதேபோல் ஒகி புயலில் இறந்த மீனவர்களின் சொந்த கிராமங்கள் அனைத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
0 Comments