Tamil Sanjikai

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத, வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையுள்ள பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

வரும் நிதியாண்டில் வரவு 1 லட்சத்து 97 ஆயிரத்து 721 கோடி ரூபாயாகவும், செலவு 2 லட்சத்து 12 ஆயிரத்து 35 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 314 கோடி ரூபாயாகவும் நிதிப்பற்றாக்குறை 44 ஆயிரத்து 176 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிற்கான நிகர கடன் வரம்பு 51 ஆயிரத்து 800 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிகர கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி உட்பட நிலுவையில் உள்ள மொத்தக் கடன் வரும் நிதியாண்டில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 23 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பு நடப்பு நிதியாண்டில் 8.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் கடந்த நிதியாண்டில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய 5 ஆயிரத்து 454 கோடி ரூபாய் அளவிலான உறுதிசெய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகை மத்திய அரசிடமிருந்து இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இந்த நிலுவைத் தொகைகளை விடுவிப்பதில் மத்திய அரசு செய்யும் தாமதம் மாநிலத்தின் நிதிநிலையின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் வரி வருவாய் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதிலும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநிலத்தின் பங்கு மற்றும் இழப்பீட்டுத் தொகை தாமதமாக மத்திய அரசால் விடுவிக்கப்படுவது, மாநிலத்திற்கு அதிக நிதி நெருக்கடியினை அளித்துள்ளதாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment