Tamil Sanjikai

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து புதுமண தம்பதிகளின் நூதன முறையிலான விழிப்புணர்வு முயற்சி அனைத்து தரப்பினரிடையே பாராட்டினை பெற்றுக்கொடுத்துள்ளது.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட்டினால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் அரசு சார்பிலும் போக்குவரத்து காவல்துறை சார்பிலும் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் இன்று கீர்த்திராஜ்- தனசிரியா தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதிகள் இருவரும் ஹெல்மெட் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இருவரும் மணக்கோலத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் இவர்கள் சாலையில் செல்கின்ற பொழுது, எதிரே வருகின்ற வாகன ஓட்டிகளிடமும், அருகில் வரும் வாகன ஓட்டிகளிடமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுமணத் தம்பதினர் மணக்கோலத்தில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும், இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், "மனித உயிர் மிகவும் விலை மதிப்பற்றது. ஆனால், அந்த மனித உயிரினை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு சின்ன செயல் தான் இந்த ஹெல்மெட் அணிவது. ஹெல்மெட் என்பது மிக மிக அவசியமானது. ஆகவே, எங்களுக்கு திருமணம் முடிந்த அடுத்த பணியாகவே ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்.

நாங்கள் மணக்கோலத்தில் செல்வதால் நாங்கள் சொல்லும் கருத்தினை சிலராவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் திருமணம் முடிந்த நிலையில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாங்கள் மேற்கொண்டோம். ஒவ்வொருவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும்" என்று தம்பதியர் இருவரும் இணைந்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Comments

Write A Comment