Tamil Sanjikai

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்து 10 நாட்கள் ஆகியும் மக்கள் மீளாத்துயரில் தவித்து வருகிறார்கள் .பல்வேறு கட்சியினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இந்நிலையில், கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டி தரும் புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தென்னங்கன்றுகள் வருமானம் ஈட்டித் தர குறைந்தது 5 வருடம் ஆகும் என்பதால், ஊடு பயிர்கள், வாழைக்கன்றுகள், காய்கறிச் செடிகளுக்கான விதைகளையும், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம் உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சொட்டு நீர்ப்பாசன விவசாயிகள் போர் அமைக்கவும், பைப், என்ஜின், மோட்டார் உள்ளிட்டவற்றை வாங்கவும் அரசு மானியம் குறித்த தகவல்களை மாவட்ட வேளாண் செயற் பொறியாளர், மற்றும் இணை இயக்குனரிடம் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment