சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரின் ஒரு வார தலைமறைவுக்கு பின்னர் சிபிசிஐடி தனிப்படை போலீசாறால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மேலும் 3 பேரை நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமது இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவராக சேர்ந்துள்ளார். தான் மாட்டி கொள்வோம் என்று தெரிந்த மாணவர் இர்பான் கல்லூரியில் விடுப்பு எடுத்துவிட்டு கடந்த 8-ந் தேதி மொரீசியஸ் நாட்டுக்கு சென்றுவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் தற்போது மாணவர் இர்பான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை வருகிற 9-ந் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இர்பான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்துவார்கள்.
இந்த நிலையில் மாணவர் முகமது இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பானின் தந்தை டாக்டர் முஹம்மத் ஷபி வேலூர், வாணியம்பாடி பகுதிகளில் 2 கிளினிக்குக்குள் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இர்பானின் தந்தை டாக்டர் முஹம்மத் ஷபி போலி மருத்துவர் என தகவல் வெளியாகி உள்ளது. முஹம்மத் ஷபி, டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார் என்றும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்து உள்ளது. மருத்துவப் படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே கிளினிக்குக்குள் நடத்தி வந்ததும் தெரியவந்து உள்ளது.
0 Comments