Tamil Sanjikai

ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியது.

தீர்ப்பாய உத்தரவின் படி அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி குழு, ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் வாதிடப்பட்டது ‘கடந்த இருபது ஆண்டுகாலமாக சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இதை ஆராய்ந்து பார்த்தால் ஆண்டுக்கொரு முறை நிலத்தடி நீர் மாசு வித்தியாசப்படுவது தெளிவாக தெரியும். இதற்கு முக்கிய காரணம் ஆலையில் காப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஜிப்சம்,

காப்பர் கழிவுகள், கேஸ், மற்றும் சல்பரிக் ஆசிட் ஆகியவற்றால் தான் நிலத்தடி நீர் முழுவதுமாக மாசடைந்துள்ளது. இதில் காற்று மாசும் அடங்கும். மேலும் ஆலை விவகாரத்தில் ஆய்வு நடத்த ஓய்வு நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவும் சரியான ஆய்வை மேற்கொள்ள தவறிவிட்டது. ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கலெக்டர் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை பெற மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விண்ணப்பிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று மாசு அடைவதற்கு ஆதாரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. மேலும் ஆலையின் உரிமத்தை 3 வாரத்தில் புதுப்பித்து அளிக்கவும் உத்தரவு வழங்கியது.

0 Comments

Write A Comment