Tamil Sanjikai

சென்னை சைதாப்பேட்டை, ஜோதி தோட்டம், நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா.34 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். மாநகராட்சி ஊழியரான இவருடைய தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் ஜெயாவுக்கு இந்த வேலை கிடைத்தது.

மேலும் ஜெயாவின் கணவர் மூர்த்தி இறந்து விட்டார். ஜெயா தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. அதை வாடகைக்கு விட்டு உள்ளார்.

இவருடைய அக்காள் தேவி. மாமல்லபுரத்தில் வசிக்கிறார். ஜெயா, தனது அக்காள் தேவிக்கு வீட்டு வாடகை பணத்தை கொடுத்துவிடுவார். மேலும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவருடன் ஜெயா நெருக்கமாக பழகி வந்தார். அவரை 2-வது திருமணம் செய்து கொள்ள ஜெயா முடிவு செய்திருந்ததாக தெரிகிறது.

ஜெயாவின் இந்த முடிவு தேவிக்கு பிடிக்கவில்லை. ஜெயா மறுமணம் செய்து கொண்டால் தனக்கு ஜெயா மூலம் வந்து கொண்டிருக்கும் பண உதவி கிடைக்காமல் போகலாம் என்று பயந்தார்.

இந்தநிலையில் ஜெயா மர்மமான முறையில் கடந்த திங்கட்கிழமை அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார். ஜெயாவுக்கு ஏற்கனவே வயிற்றில் இருந்த கட்டிக்காக ஆபரேஷன் நடந்தது. அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் ஜெயா இறந்துவிட்டதாக அவருடைய அக்காள் தேவி நாடகமாடினார்.

போலீசுக்கும் அதுபோல் தகவல் கொடுத்தார். ஆனால் ஜெயாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அக்கம்பக்கத்தினர் போலீசிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில் சைதாப்பேட்டை போலீசார் விசாரித்தனர். ஜெயாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் ஜெயா கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் ஜெயாவின் வீடு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 2 பேர் ஜெயாவின் வீட்டுக்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் ஜெயாவின் அக்காள் தேவி ரூ.10 ஆயிரம் கூலி கொடுத்து தனது மாமா எத்திராஜ் (41) என்பவரையும், அவருடைய கூட்டாளி சரவணன் என்பவரையும் அனுப்பி வைத்து ஜெயாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஜெயாவின் அக்காள் தேவி மற்றும் எத்திராஜ், சரவணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

0 Comments

Write A Comment