Tamil Sanjikai

திருப்பூரை அடுத்த பல்லடம், பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகன் விக்னேஷ்(வயது 34.. வேன் டிரைவராக . பணியாற்றும் இவருக்கும், பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அந்த சிறுமி பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறாள். இவர்களது காதல் விவகாரம் விக்னேஷின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சிறுமியின் வீட்டிலோ அவருடைய காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டனர். இருந்தாலும் தனது மகளுக்கு 17 வயதே ஆவதால் உடனே திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைப்பதாக விக்னேசிடம் உறுதியளித்தனர்.

பின்னர் விக்னேஷ், தனது வீட்டை விட்டு வெளியேறி,தனது காதலி வீட்டுக்கே சென்று அங்கேயே தங்கியிருந்தார். தனது மகன் வீட்டுக்கு சரிவர வராததால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணவேணி அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது காதலி வீட்டில் தங்கியிருக்கும் விவரம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி, சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.

இதை அறிந்த விக்னேஷ், தன்னால் தனது காதலியின் வீட்டார் அவமானம் அடைந்து விட்டார்களே என்ற வேதனையில் அங்கிருந்து புறப்பட்டு காரணம்பேட்டையில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். தினமும் காதலியின் அருகிலேயே இருந்து அவருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த காலம் போய், தற்போது செல்போனில் மட்டுமே காதலியுடன் பேச முடிகிறதே என்று விக்னேஷ் விரக்தி அடைந்தார். நடந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பி எப்பொழுதும் சோகமாகவே காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை விக்னேஷ் காரணம்பேட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது லட்சுமி மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே வந்ததும் ரோட்டோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , காதலியை சந்திக்க முடியாத வேதனையில் தினம், தினம் சாவதை விட விஷம் குடித்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தார். இதற்காக தான் ஏற்கனவே வாங்கி வந்த விஷ பாட்டிலை திறந்து விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்த விவரத்தை தனது காதலிக்கு சொல்வதற்காக தனது செல்போனை தேடினார். ஆனால் அவர் தனது செல்போனை எடுக்காமல் வந்தது தெரிந்தது. அந்த வழியாக வந்த ஒருவரிடம் இரவலுக்கு செல்போனை வாங்கி தனது காதலியை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி அழுதார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்என்று கேட்டறிந்த சிறுமி, கண்ணீரும், கம்பலையுமாக தனது மொபட்டை எடுத்துக்கொண்டு காதலன் இருக்கும் இடம் நோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தாள். அங்கு ரோட்டோரம் அமர்ந்து இருந்த தனது காதலனை கட்டிப்பிடித்து கதறிய சிறுமி பின்னர் உடனடியாக, தனது மொபட்டில் அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள். தன்னை இறுகப்பிடித்துக்கொள்ளுமாறு கூறியதுடன் விக்னேஷ் மயங்கி விடாமல் இருக்க அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி சிறுமி மொபட்டை ஓட்டினாள். தனது காதலனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மொபட்டை ஓட்டிக்கொண்டு பல்லடம் வந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தாள்.

டாக்டர்கள் விக்னேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். அதன்பிறகும் மொபட்டில் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றாள். அதற்குள் விக்னேஷ் மயங்கினார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வரும் வழியில் விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் தனது காதலனின் உடலை கட்டிப்பிடித்து சிறுமி கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

தன்னை சந்திக்க முடியாத விரக்தியில் விஷம் குடித்தவரை எப்படியும் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி விடலாம் என்று நினைத்து மொபட்டில் அழைத்து வந்தேனே..! என்னை ஏமாற்றி விட்டு போய்விட்டாரா...! நன்றாகத்தானே என்னுடன் பேசி வந்தார். இப்படி நடுவழியிலேயே இறப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லையே...! இனி உங்களை எப்போது சந்திப்பேன்...! என்று சிறுமி கதறி அழுதது அங்கு நின்றிருந்தவர்களை கண்ணீர் மல்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Write A Comment