பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்திய வழக்குகளில், குற்றவாளிகளை விடுவிக்கும் மாநில அரசின் முடிவை தடுக்கும் விதிகள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு அனுமதி அளிக்கக் கோரி, ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து 75 நாட்களுக்கு மேலாகியும் ஆளுநர் இன்னும் முடிவெடுக்க வில்லை. இதனிடையே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பேரறிவாளன் கடிதம் அனுப்பினார். அதில், குற்ற விசாரணை சட்டத்தின் 432 முதல் 435 வரையான பிரிவுகளின் கீழ், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகலை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில், முன்கூட்டியே விடுதலை செய்யும் மாநில அரசின் முடிவை தடுக்கும் மத்திய அரசின் விதிகள் என்னென்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் தண்டனையைக் குறைத்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுகளின் நகல்களையும் பேரறிவாளன் கேட்டிருந்தார். ஆனால், உள்துறை அமைச்சகம் பதில் அளிக்காததால், மத்திய தகவல் ஆணையத்தில் பேரறிவாளன் முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த மத்திய தகவல் ஆணையர், பேரறிவாளன் கேட்டுள்ள அனைத்து தகவல்களையும் மூன்று வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதியிட்ட கடிதத்தை பேரறிவாளனுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் மணாஸ் மொண்டல் அனுப்பியுள்ளார். அதில், குற்றவாளிகளுக்கான தண்டனையை குறைப்பது தொடர்பாகவோ, தண்டனையை குறைப்பதிலிருந்து மாநில அரசை தடுக்கும் வகையிலோ எந்த விதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட விவரங்கள் இல்லை என்றும், அது தொகுக்கப்பட்டவுடன் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், மத்திய அரசு தலையிட முடியாது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
0 Comments