Tamil Sanjikai

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு ஆலையை மீண்டும் திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது. இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆலையை எந்த நிலையிலும் திறக்க கூடாது என்ற ஆணித்தரமான விவாதத்தை தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தோம். நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை தமிழக மக்களுக்கு குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சிகரமான தீர்ப்பாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

இந்த விஷயத்தில், காழ்ப்புணர்ச்சியோடு, அரசின் மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு பல கட்சிகள் செயல்பட்டன. ஆனால் அரசு ஆலை திறக்க கூடாது என்று கொள்கை முடிவெடுத்திருந்தது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நிலையிலும் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக இருந்தோம். இந்த முடிவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பின் நகல் கிடைக்கப்பட்ட உடன் மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த அதிகாரமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் வலுவான வாதம் முன்வைக்கப்பட்டது. தேசிய தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உள்ளது. தீர்ப்பில் ஐகோர்ட்டை நாடலாம் என்று கூறப்பட்டு உள்ளது. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். ஐகோர்ட்டில் வழக்கு வந்தாலும் அதனையும் சந்திப்போம்’ என்றார்.

0 Comments

Write A Comment