Tamil Sanjikai

சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஹோட்டல் கார் பார்கிங்கில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில், ஹவாலாப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அந்த ஹோட்டலைக் கண்காணித்து வந்தனர்.

நேற்று மாலை ஹோட்டலில் இருந்து ஒரு தொழிலதிபர் கையில் தோல் பையோடு வெளியே வந்தார். அதிகாரிகள் அவரை மடக்கி பையை வாங்கிப் பார்த்தபோது அதில் 6 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொழிலதிபரை விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ஹாங்காங்கில் இருந்து கிலோ கணக்கில் தொழிலதிபர் தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்துள்ளார். விமானத்தில் பயணிகள் போல் வரும் நபர்கள் தங்கக் கட்டிகளைக் கடத்தி வருவார்கள். தங்கக் கட்டிகளை தொழிலதிபரிடம் கொடுத்து விட்டு அதற்கு ஏற்ப கமிஷனை வாங்கிக் கொண்டு பறந்து விடுவார்களாம்.

அப்படி தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பேர் ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சென்னையில் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மேலும் ஒரு கிலோ தங்கமும், தொழிலதிபர் உதவியாளர்களின் வீடுகளில் 6 கோடி ரூபாய் ரொக்கமும் பிடிபட்டன. இதில் மொத்தம் 7 கிலோ தங்கம், 11 கோடியே 16 லட்சம் ரூபாய், தங்கம் கடத்த உதவிய கார் ஆகியவை தொழிலதிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தொழிலதிபர், தென்கொரிய நபர்கள், உதவியாளர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

0 Comments

Write A Comment