Tamil Sanjikai

காவிரியின் குறுக்கே மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 5192 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வரைவு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் நீர்வரத்து இன்றி, விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று கருதுவதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

தமிழக அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. எனினும், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கையை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. கர்நாடக அரசின் பரிந்துரைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், அணை கட்டும் பணியை கர்நாடக அரசு வேகப்படுத்தும் என்று தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நீண்ட இழுவைக்கு பிறகு மேலாண்மை ஆணையம் அமைத்த மத்திய அரசு, தற்போது மீண்டும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக மேகதாது திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேகதாது அணை பற்றி ஆலோசிக்க டிசம்பர் 6-ஆம் தேதி கர்நாடகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து முன்னாள் முதல்வர்களும், நீர்வளத்துறை முன்னாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்க முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்துள்ளதை அடுத்து கூட்டத்துக்கு குமாரசாமி ஏற்பாடு செய்துள்ளார்.

0 Comments

Write A Comment