தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவரின் மகள், திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டம் படித்து வருவதுடன், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள 2வது முஸ்லிம் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து, வகுப்புத் தோழியுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி, தனது அறையில் தோழிகளுடன் மாணவி இருந்தபோது, அங்கு வந்த அவரின் காதலன் தவச்செல்வன் என்பவர், மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவியின் அலறல் சத்தம் கேட்கவே, அவரின் தோழிகள் ஓடிவந்து பார்த்தபோது, மாணவி தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்த அவரின் தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த மாணவியை அங்கிருந்து மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸார் விசாரணையில், ``மாணவி ஏற்கெனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இடையில் நாகப்பட்டினம் மாவட்டம், சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தவச்செல்வன் என்பவருக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்தப் பழக்கம் மெள்ள மெள்ளக் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் தவச்செல்வன் சட்டக்கல்லூரி மாணவியைத் தீவிரமாக காதலித்து வந்தநிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாணவி, தவச்செல்வனை புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தனது காதலை மறக்க முடியாமல் தவச்செல்வன், மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு மாணவி மறுத்ததால், ஆத்திரத்தில் தவச்செல்வன், மாணவியைத் தீவைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியது” தெரியவந்தது.
மேலும் தீக்காயமடைந்த சட்டக்கல்லூரி மாணவியிடம் நடந்த சம்பவங்களை வாக்குமூலமாக வாங்கி வழக்கு பதிவு செய்த போலீஸார், திருச்சி கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்துவந்தனர். தவச்செல்வனை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், தவச்செல்வனை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் தவச்செல்வன், திருச்சி நகரை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வரவே, போலீஸார் அங்கு விரைந்துவந்தனர். போலீஸாரைப் பார்த்துவிட்ட தவச்செல்வன், தப்பிப்பதற்காக ஒரு பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது, அவரின் கால் உடைந்தது. இதனால் போலீஸார் அவரைத் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீக்காயமடைந்த மாணவிக்கும், கால் உடைந்த தவச்செல்வனுக்கும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது
போலீஸாரிடம் தவச்செல்வன் அளித்த வாக்குமூலத்தில், ``நானும் மாணவியும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பழகி வருகிறோம். இருவரும் காதலித்து வந்த நிலையில், சென்னை தரமணியில் டிராவல்ஸ் வைத்திருந்த நான், ஊருக்கு வந்து அவருக்காகத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நான்கு மாதங்கள் நானும் சட்டக் கல்லூரி மாணவியும் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு தங்கியிருந்தோம். மீண்டும் ஊருக்குத் திரும்பி வந்து மாணவி படிப்பை தொடர்ந்து வந்த நிலையில், அவருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தேன். அதிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக அவர் என்னிடம் சரியாகப் பேசாமல் . தொடர்ந்து என்னைப் புறக்கணித்து வந்தார். அதன் காரணமாக நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி வந்தேன். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் வேறு யாருடனோ பழகி வருவதால் என்னை நிராகரித்து வந்தார்.
அதனால் அவரைக் கொல்ல முடிவெடுத்தேன். கடந்த 22-ம் தேதி அதிகாலை ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து, எனது பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்தேன். தொடர்ந்து மாணவியிடம் பேசுவதற்காக வீட்டுக்குச் சென்றபோது அவர் தோழிகளுடன் வீட்டில் இருந்தார். அவரிடம் பேசுவதற்காக அவரைத் தனியே அழைத்து வந்து பேசிக்கொண்டிருந்தபோதும், என்னைத் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினேன். அதற்கு அவர் உடன்பட மறுக்கவே, தனக்சு கிடைக்காத அவள், இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவு செய்தேன். அப்போது நான் வைத்திருந்த பெட்ரோலை சட்டக் கல்லூரி மாணவியின் மேல் ஊற்றித் தீ வைத்து எரித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டேன்” என்று கூறியுள்ளார். தீக்காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவியும், தவச்செல்வனும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 Comments