கோவை மாவட்டத்தில் பொருள் வாங்குவதுபோல் சென்று, இனிப்பு கடையில் இருந்த பெண் அணிந்திருந்த 6.5 சவரன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள ஹைஸ்கூல் புதூர் பகுதியில் இக்கரை போளுவாம்பட்டி செல்லும் சாலையில் இனிப்பு, காரம் விற்பனை செய்யப்படும் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 30ஆம் தேதி இரவு கடையின் உரிமையாளரான முத்து என்ற பெண்மணி, கடையில் விற்பனையை கவனித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, தொப்பி, கண்ணாடி அணிந்து, கர்சீப்பால் முகத்தை மறைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் இனிப்பு வகைகள் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். பின்னர் கடையின் வெளியே சென்று மீண்டும் உள்ளே நுழைந்த அந்த இளைஞர், திடீரென முத்து அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.
அப்போது, நிலை தவறி கீழே விழுந்த முத்துவை விடாமல், அவர் அணிந்திருந்த 6.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, கண்காணிப்பு காமிரா காட்சிகளை கொண்டு ஆலந்துறை காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார்.
இந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது ஆலந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞர், கடையின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
0 Comments