Tamil Sanjikai

திருச்சியில் தங்கையை காதலித்த வாலிபரை ஆத்திரம் கொண்ட அண்ணன் நண்பர்கள் துணையுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவானைக்கோயில், திம்மராயசமுத்திரம் பாரதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (25). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவரின் தங்கையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணிகண்டனை நடுரோட்டில் வைத்து இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்கையை காதலித்ததால் ஆத்திரமடைந்த சிவா தனது நண்பர்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரிவந்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment