சேத்துபட்டு ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை, திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் அந்த இளைஞர் பாய்ந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்..
படுகாயமடைந்த இருவரையும் ரயில்வே போலீசார் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இருவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தாக்கப்பட்ட பெண் 26 வயதான தேன்மொழி எழும்பூரில் தங்கி கூட்டுறவு துறையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
வழக்கம் போல் வேலை முடிந்து சேத்துப்பட்டில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக காத்திருந்த போது, அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
தாக்குதலால் நிலைகுலைந்த பெண் கூச்சலிட்டதால், பொதுமக்கள் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அப்போது, அரிவாளை போட்டு விட்டு தப்பிய நபர் மின்சார ரயில் முன்பு பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு முன்பு அந்த பெண்ணுடன் அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட தேன்மொழிக்கு இடது தாடையிலும், இடது கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தாக்கிய இளைஞர் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கும் என கருதவதால் ஒரு தலைகாதலால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். கொலை செய்யும் நோக்கத்தில் அதற்கான அரிவாளை சாணை பிடித்து எடுத்து வந்து தாக்கியிருக்கிறார் அந்த இளைஞர். 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தை போன்று நடந்திருப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments