Tamil Sanjikai

தமிழ்நாட்டில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக மூடப்படவுள்ள கடைகள் எதனை? என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நீதிமன்றம் முன் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மணப்பாறை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது, தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதாகவும், இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மதுவுக்கு அடிமையானவர்கள் தமிழகத்திலேயே அதிகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநரை இந்த வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மேலும், தமிழகத்தில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன?. போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் எத்தனை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு திட்ட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா?., எத்தனை டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு உரிமம் கோரி எத்தனை பேர் விண்ணபித்துள்ளனர்? என்றும், உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் என்னென்ன? என்றும் நீதிபதிகள் வினவினர்.

பார்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படுகிறதா?., அதிகாரிகள் பார்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனரா? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள், எப்போது மூடப்படவுள்ளன? என்பது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

0 Comments

Write A Comment