கோவை, மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிகாலை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வர்ஷினி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு, கனகராஜின் அண்ணன் வினோத்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களைப் பிரித்துள்ளனர். இந்த நிலையில், கனகராஜின் தந்தை கருப்பசாமி, இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, இருவரையும் வேறு இடத்தில் தங்கவைத்துள்ளார் கருப்பசாமி. கடந்த மூன்று நாள்களாக கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனிடையே கனகராஜின் அண்ணன் வினோத், நேற்று மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்குச் சென்று, ``அவளை திருமணம் செய்யக் கூடாது” என்று கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியபோது, மறைத்து வைத்திருந்த அரிவாளால், வினோத் கனகராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கனகராஜின் கழுத்து, கை மற்றும் தலைப் பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் வர்ஷினி பிரியாவையும் வினோத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வர்ஷினி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வர்ஷினுக்கு உடலில் 75 சதவிகிதம் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி சுஜீத்குமார் நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மேட்டுப்பாளையம் போலீஸார் தலைமறைவாக உள்ள வினோத்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கொலை செய்த வினோத்குமார் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments