மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை. விளம்பர செலவுக்கு 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தமிழக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்பட வில்லை. ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரளாவில் நடந்து வரும் சபரிமலை விவகாரத்தில் பாஜக அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தும் கேரள அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். அரசியலுக்காக போராடும் இவர்கள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டுடன்தான் போராடுகிறார்கள்.
குமரியில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இங்கு கொண்டுவரப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இம்மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இம்மாத இறுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை மாநாடு நடக்கிறது. டிசம்பர் மாதம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்த உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
0 Comments