Tamil Sanjikai

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியை சிக்க வைக்கும் நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரான சத்தியமூர்த்தி, தனது வீட்டில் 150 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போய்விட்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த முதிய தம்பதி தனது மனைவி ஜோதியை வசியம் செய்து நகைகள், பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசில் சத்தியமூர்த்தி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார், சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்படாததும், பீரோ எந்த சேதமும் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதனால் சத்தியமூர்த்தி அளித்த புகார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கு விடை தெரிந்து கொள்ளும் வகையில், சத்தியமூர்த்தியின் மனைவி ஜோதியிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் ஜோதி சரிவர பதில் அளிக்காமல், முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது. சத்திய மூர்த்தி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் திரும்பிய திசையெல்லாம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வீட்டின் நுழைவு வாயில் பகுதியிலும் சிசிடிவி கேமரா இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை போலீஸார் பார்வையிட்டனர். அதில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு கொள்ளையர்கள் வந்து சென்றது தொடர்பான எந்த காட்சிகளும் இல்லை. எனவே ஜோதியிடம் போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் கிடைத்த பணத்தை கொண்டு தான் நிலம் வாங்கி இருந்தது தெரிய வந்தது. அதேநேரத்தில் நகைகளை அடமானம் வைத்து மனைவி ஜோதி நிலம் வாங்கியிருப்பது தனக்கு தெரியாது என்று விசாரணையில் சத்தியமூர்த்தி தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் 150 சவரன் கொள்ளை போனது பொய்யான புகார் என்பதை சைதாப்பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர். எதிர் வீட்டில் வசித்து வரும் முதிய தம்பதியை கொள்ளை வழக்கில் சிக்க வைக்கும் நோக்கில், வழக்கறிஞர் சத்திய மூர்த்தியும் மனைவி ஜோதியும் பொய்யான புகாரை கொடுத்ததாக சைதாப்பேட்டை போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சைதாப்பேட்டை போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment