Tamil Sanjikai

கோவை, மேட்டுப்பாளையத்தில் , வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டி கொன்று, தம்பியின் காதலியை தாக்கிவிட்டு தலைமறைவாகிய அண்ணன் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சீரங்கராயன் ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது 2 வது மகன் கனகராஜ்(22 ) மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் பாரம் தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்த மூர்த்தி என்பவரின் 2வது மகள் வர்ஷினி பிரியாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், வர்ஷா வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் இவர்களின் காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வர்ஷினியின் வீட்டில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக வர்ஷினி கனகராஜின் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கனகராஜ், வர்ஷினி பிரியாவை அழைத்துக்கொண்டு சீரங்கராயன் ஓடை அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த வினோத் குமார் நேற்று அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வினோத் குமார் அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை தடுக்க முயன்ற வர்ஷினியையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்குமாரை தேடி வந்தனர்.

இந்தநிலையில், வினோத்குமார் நேற்று காலை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment