தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட உள்ள 3-வது அணு உலைக்கான, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்கள் வழங்கும் பணியை ரஷிய அரசின் அணுமின் உற்பத்தி கழகமான ‘ரொசாட்டம்’ நிறுவனத்தின் கிளை அமைப்பான ஏ.எஸ்.இ. ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலைக்கான முக்கிய எந்திர தளவாடங்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.
அதில், ‘மோல்டன் கோர் கேட்சர்’ எனப்படும் அணு உலை மையப்பகுதியின் தரையில் பொருத்தப்படும் பாதுகாப்பு கவசம், அணு உலை குழிக்குள் வைக்கப்படும் உதிரி பாகங்கள், உலர் பாதுகாப்பு கவசம், உருளை வடிவ அணு உலை, அரணில் வெப்பத்தை தாங்கும் அமைப்பு, கூரையை ஒட்டி அமைக்கப்படும் சாதனங்கள், அணு உலை போன்றவையும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உதவும் சாதனங்கள் ஆகும்.
‘மோல்டன் கோர் கேட்சர்’ என்ற பாதுகாப்பு கவசம் ரஷிய அதிநவீன ரக அணு உலைகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்தினால், அணு உலையின் மைய கருவாக உள்ள பகுதி வெப்பத்தில் உருகி திரவமாக நேர்ந்தாலும், அது வெளியேறி அணு மின் நிலையம் உள்ள பகுதியில் அணுக்கதிர் வீச்சு எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதற்கு இந்த ‘மோல்டன் கோர் கேட்சர்’ உதவிகரமாக இருக்கும்.
3-வது அணு உலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உபகரணங்கள் மின்சாரம் தடைபட்டாலும் சிக்கல் இல்லாமல் தொடர்ந்து தானாக செயல்படும். அதாவது மின்சாரம் இல்லாத நேரத்திலும் இவற்றை இயக்குவதற்கு யாரும் தேவையில்லை. அதேபோல எச்சரிக்கும் கட்டமைப்பு இன்றியும் கூட, இந்த புதிய வகை சாதனங்கள் செயல்படக்கூடியவை. இதனைத்தொடர்ந்து உந்து சக்தியை தாங்கி கொள்ளும் திறன் கொண்ட ஒரு கூரை அமைப்பு, நியூட்ரான் நகர்வை கண்காணிக்கும் அரங்குகளுடைய எந்திரங்கள் விரைவில் கூடங்குளத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இதுகுறித்து ஏ.எஸ்.இ. நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நடைபெறும் அனைத்து பணிகளுக்கான துணைத்தலைவர் ஆன்ட்ரி லெப்தேவ் கூறுகையில், கூடங்குளம் 3-வது அணு உலை அமைய உள்ள இடத்தில் நிறுவப்பட வேண்டிய முக்கிய எந்திர தளவாடங்கள் சப்ளை செய்யப்பட்டு விட்டன. இதனால் தாமதம் எதுவும் இல்லாமல் தேவையான பணிகள் அனைத்தும் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி விரைவாக நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
0 Comments