ஜெயலலிதா 100 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மோடி அவரை வந்து பார்க்கவில்லை. வெளிநாட்டிற்கு சிகிட்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நாகர்கோவிலில் இருந்து காஷ்மீருக்கு நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் ரதயாத்திரை தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, முன்னாள் திமுக தலைவரான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்த பிரதமராக ராகுல்காந்தியை முன்மொழிந்து அதற்கு திமுக துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். இப்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகள் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்திதான் வரமுடியும் என்ற கருத்தை கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை முன்மொழிந்திருப்பது பல்வேறு மாநிலங்களுக்கு உந்துதலாக அமையும்.தேசிய அளவில் இப்போது 21 கட்சிகள் ஒன்றிணைந்து ராகுல் காந்தி தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய தயாராக உள்ளன. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும். பாஜகவின் பினாமி அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு அகற்றப்பட்டு திமுகவின் தலைமையில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், மத்தியில் ராகுல்காந்தி பிரதமராகவும் வர கருணாநிதி சிலை திறப்பு விழா அஸ்திவாரம் போட்டுள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி தலைமையை ஏற்று கொண்ட எந்த கட்சியை சேர்ந்தவர்களும், நிபந்தனை இல்லாமல் வந்தால் அவர்களை ஏற்று கொள்வதில் தவறில்லை.
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். ஜெயலலிதா 100 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மோடி அவரை வந்து பார்க்கவில்லை. வெளிநாட்டிற்கு சிகிட்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. எம்ஜிஆர் உடல்நல குறைவுடன் இருந்தபோது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து அவர் நலம்பெற்று திரும்ப செய்தார். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஜெயலலிதாவை பார்க்க வராதது மட்டுமல்ல, கஜா புயலால் தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததையும், 50 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் மோடி பார்க்க வந்தாரா? 15 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்டபோது அதற்கு 300 கோடி தருவதாக அறிவித்ததுடன், அதனையும் தரவில்லை என்று வருவாய்துறை அமைச்சர் இன்று கூறி வருகிறார். காங்கிரஸ் மத சார்ப்பற்ற கட்சி. பாஜக ஒரு மதத்தை உயர்த்தி, இரு மதத்தை இழிவுபடுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால் காங்கிரசில் அப்படி இல்லை. ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து. காங்கிரசில் உள்ள உட்கட்சி பிரச்சனையை சமாளிப்பது எனக்கு தெரியும் என்று அவர் தெரிவித்தார்.
0 Comments