Tamil Sanjikai

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்து உள்ளது. இந்த காலத்தில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என்பதற்காக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள்.

சபரிமலையில் நடந்த போராட்டம் காரணமாக இதுவரை எந்த இளம்பெண்ணும் அங்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. போராட்டத்தை ஒடுக்குவதற்காக சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நிலக்கல் வரை மட்டுமே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து பஸ்சில் தான் பக்தர்கள் பம்பை செல்ல வேண்டும். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி தனது ஆதரவாளர்களுடன் காரில் சபரிமலைக்கு சென்றார். அப்போது நிலக்கல்லில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் சந்திரா, அவரது காரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஐபி என்ற முறையில் மத்திய அமைச்சரின் காரை மட்டும்தான் அனுமதிக்க முடியும் என்று கூறியதால் பொன். ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பஸ்சில் பம்பைக்கு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு பொன். ராதாகிருஷ்ணன், திரும்பியபோதும் அவரது காரை தடுத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். கேரள போலீசார் பொன். ராதாகிருஷ்ணனை அவமதித்து விட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சபரிமலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் சரியான முறையில் நடந்து வருகிறார்கள். சபரிமலையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதுதான் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டதால் தான் அவருடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானது. போலீசார் நடந்து கொண்டதில் தவறில்லை. சபரிமலை செல்லும் உண்மையான பக்தர்களுக்கு போலீசார் எந்த தடையும் விதிக்கவில்லை என்று ஐ.ஜி., கேரள ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கோர்ட்டும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கேரளாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை பிரச்சனையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது என்று அவர் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment