தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது. இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கின்றன. பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குவிந்து வருகிறது. ஆதரவுக்கரம் நீட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உடனடி நிவாரண நிதி உதவியாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி உதவி நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கிட முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 லாரிகளில் உணவு மற்றும் உடைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 6 மருத்துவக் குழுக்களும், 72 கேரள மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தேவையை பொறுத்து உதவியை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments