கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவராக நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி கார்த்திக் என்பவர் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நாங்குநேரி அருகே அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது.
அதனைதொடர்ந்து கார்த்திக் மற்றும் சிலரையும் நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கார்த்திக் ஜாமீனில் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் இரவு நேரங்களில் சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி வந்துள்ளனர். இதனைதொடர்ந்து கார்த்திக், மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை, சுப்பையா ஆகிய 3 பேரும் நேற்று இரவு நாங்குநேரி காவல் நிலையத்திற்கு சென்று, ஜாமீனில் வந்த பின்னும் எங்களை ஏன் தொந்தரவு செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
போலீசார் 3 பேரையும் வெளியேறும் படி கூறி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை மூவரும் திடீர் என தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைப்பார்த்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்பையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாங்குநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments