Tamil Sanjikai

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. புயல் மழையால் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தானும் தங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருப்பதாகவும் விரைவில் நேரில் சந்திப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கஜா புயலின் கொடுமையான தாக்கத்தால், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகள் மிகவும் மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. பேரிடருக்குப் பின்னான மீட்புப்பணிகள், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புனரமைப்பதிலும் அரசு சுணக்கம் காட்டியுள்ளது.

அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவர கணக்கை விட, பாதிப்புகள் பன்மடங்கு அதிகமாக உள்ளன. அரசு உண்மை விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் நீதி மய்யம், ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக, மீட்புப்பணிகளில் அரசு செய்யத்தவறியதை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாத கடமை ஆகிறது.

1. கஜா புயலினை தேசிய பேரிடராக அறிவித்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதோடு மாநில அரசினையும் இது குறித்து வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.

2. தமிழக முதல்வர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு உடனடியாக நேரடியாகச் செல்வதன் மூலம் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் ஏனைய குடிமை வசதிகள் விரைவாக சீரமைக்கப்படும். இதனை முதல்வர் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

3. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் நிதி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

4. புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்துக் குடிமை பொருட்களும் கட்டணமின்றி 3 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

5. மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

6. வீடுகள் இழந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மேற்கூரைகள் மற்றும் புனரமைப்பு பணிகளை அரசு உடனடியாக செய்திடவேண்டும்.

7. மருத்துவ வசதிகள், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அனைவருக்கும் உடனடியாக கிடைத்திடும் வகையில் மருத்துவ முகாம்கள் இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

8. பயிர்க்காப்பீட்டுத் தொகை உடனடியாக கிடைத்திடும் வகையில் அரசு செயல்படவேண்டும். பயிர் சேதாரத்திற்கான தொகையினையும் அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

9. நீண்ட நாள் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் தென்னை மரம், மற்றும் இதர மரங்களை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக அரசு நிவாரண திட்டத்தை அறிவித்து, உடனே செயல்படுத்த வேண்டும்.

10. உயிரிழந்த கால்நடைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடுகள் விரைவில் மக்களுக்கு கிடைத்திடும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

11. இது போன்ற மக்கள் இன்னலுக்குள்ளாகும் நேரங்களில், தனியார் நிறுவனங்கள், தன்னார்வல நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகள் மனிதாபிமான அடிப்படையில், கருணை உள்ளத்தோடு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவி செய்ய முன் வரவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.

மக்கள் நீதி மய்யக் கட்சியினால் மேலே எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசு, தன்னார்வல நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்திடும் வகையில் வழி வகுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யக் கட்சிப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தாங்கள் செய்து வருகின்ற கஜா புயல் நிவாரணப் பணிகளை தொடர்ந்து முழுவீச்சுடன் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் நானும் எங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருக்கிறோம். விரைவில் நேரில் சந்திக்கிறேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment