Tamil Sanjikai

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. 7 அடி உயரத்தில் திறக்கப்பட்ட இந்தச் சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிலையை மாற்றியமைக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்ததன் அடிப்படையில், புதிதாக ஜெயலலிதா சிலை வடிவமைக்கும் பணி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது. 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் ஜெயலலிதா சிலையை அவர் தத்ரூபமாக வடிவமைத்தார். அந்தச் சிலை கடந்த மாதம் 23-ஆம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதாவின் பழைய சிலை அகற்றப்பட்டு, புதிதாக பீடம் அமைத்து புதிய சிலை அதில் நிறுவப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் புதிய சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

0 Comments

Write A Comment