கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என்பது விசாரணை அறிக்கையில், அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநரான ராஜேஷ் கடந்த மாதம் 25ஆம் தேதி மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக தனது தற்கொலைக்கான காரணத்தை அவரது செல்போனில் பேசி பதிவு செய்திருந்தார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோவில், அண்ணா நகரில் காரை நிறுத்தி இருந்த போது பெண் பயணி முன்னிலையில் தன்னை போக்குவரத்து போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜய குமாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 68 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறிக்கையானது சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேசை திட்டிய இரு போக்குவரத்து போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் கூறிய அனைத்தும் உண்மை என்றும், போக்குவரத்து போலீசார் மீதே தவறு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும், இந்த அறிக்கையானது சமர்பிக்கப்படவுள்ளது.
0 Comments