தமிழகத்தில் கஜா புயலால் குடிசைகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் குறித்த எச்சரிக்கை பெறப்பட்டவுடன், விரிவான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. புயலால் சேதமடைந்த மரங்களை வெட்டி அகற்ற, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மக்களுக்குப் பணி வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட விளை நிலங்களில், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் மா, பலா, தென்னை, முந்திரி போன்றவற்றை மீண்டும் பயிரிடவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் அரசு முழுமையாக உதவும்.
புயல் சீற்றத்தில் குடிசைகளை இழந்த ஏழை மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பயிர் சேதங்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகைகள், தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும். முதல்கட்ட நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூபாய்.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதற்காகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments