Tamil Sanjikai

பெரும்பாலானவர்கள் தங்களது ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் டைரியில் எழுதி வைக்கின்றனர். தங்கள் தொழில், பயண விபரம், வரவு செலவு, வருடாந்திர முக்கிய நிகழ்வு நாட்கள் உள்ளிட்டவைகளை முன்னதாக குறித்து வைத்து திட்டமிடவும் பலருக்கு டைரி உதவுகிறது. இவர்களுக்காக ஆண்டுதோறும் புதிய டைரிகளும் பலவிதங்களிலும் பல விலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன. டைரிகளில் உள்ள தகவல்கள், பக்கங்கள் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப விலைகள் மாறுபடுகின்றன. டைரிகள் பெரும்பாலும் சிவகாசியில் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. 2019 தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் புத்தாண்டிற்கான டைரிகள் தயாராகி விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. முன்னணி டைரி தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான அறிமுகங்களை டைரிகளில் புகுத்துகின்றனர்.கடந்த ஆண்டு டைரியிலேயே செல்போன் வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மற்றொரு டைரியில் கால்குலேட்டர் வைப்பதற்கான வசதி செய்யப்பட்டிருந்தது. இவை சிறிய ஹேண்ட் பேக் போல் ஜிப் வைத்து மூடும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

குறைந்தபட்சம் 33 ரூபாய் முதல் அதிகபட்சம் 847 ரூபாய் வரை பல விலைகளில் டைரிகள் கிடைக்கின்றன. தமிழ் டைரியில் பஞ்சாங்கம், நாட்குறிப்புகள், பல்வேறு பலன்கள், பொதுவாக செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, விளக்கேற்றும் முறை, கோயில்களில் வழிபடும் முறை, வீட்டுக்குறிப்புகள் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அதிக மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த ஆண்டு டைரி விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. கடந்த ஆண்டு விலையிலேயே டைரியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் பல்வேறு புதிய டைரிகள் அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக விஐபிகளுக்கு ‘கிப்ட்’ ஆக வழங்க விரும்புபவர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட டைரி அறிமுகமாகியுள்ளது. பட்ஜெட் விலையில் டைரி வாங்க விரும்புபவர்களுக்கும் குறைந்த விலையிலான டைரிகள் வந்துள்ளன.

0 Comments

Write A Comment