நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பகுதியில் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஊட்டி மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கூடலூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் சில இடங்களில் காபி பயிரிடப்படுகிறது. காபியை பொருத்தவரை அறுவடை காலம் அதிகம் என்பதால் இதனை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், சிலர் விற்பனைக்காகவும் பயிரிடுகின்றனர். காபி மகசூல் அதிகரித்தால், அதிக லாபம் கிடைக்கும்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது. இதனால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி மற்றும் காபி தோட்டங்கள் பசுமையாக மாறின. இந்த மழை காரணமாக ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளது. சிலர் தேயிலை பயிர்களுக்கு நடுவே ஊடு பயிராக காபி பயிரிடப்பட்டுள்ள நிலையில், தேயிலை மற்றும் காபி மகசூல் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் ஊட்டி மட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் முழுக்க காபி விளைச்சல் இம்முறை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ஒன்று 150 ரூபாய் முதல் 200 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0 Comments