கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது தொடர்பாக, 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கடத்தல் தங்கம் கைமாற்றப்படுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. ஹோட்டலை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தபோதும், கடந்த 30-ஆம் தேதி தொழிலதிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரிடம் இருந்து தலா 1 கிலோ எடையிலான 7 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் ஹோட்டலில் தங்கியுள்ள இரண்டு வெளிநாட்டவர்கள் விமானத்தின் மூலம் தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்து தங்கத்தை கைமாற்றியதாக தொழிலதிபர் தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த தென்கொரியாவை சேர்ந்த நூன் சோனிமி,வியோன் மிஹாவ் ஆகிய இரண்டு பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் ஹாங்காங்கில் இருந்து தங்கம் கடத்தி வந்ததை அந்த இரண்டு பெண்களும் ஒப்புக் கொண்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை ஹபிபுல்லா ரோடு, பாண்டிபஜாரில் இருக்கும் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் பூவிருந்தவல்லியில் உள்ள என்ரிகா எண்டெர்பிரைசஸ் என்ற தனியார் மதுபான ஆலையிலும் 14 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
0 Comments