குடகு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து கொண்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்து கொடுத்தனர். மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரண உதவிகள் செய்து முடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடகு மாவட்டத்தில் ஓய்ந்து இருந்த மழை நேற்று முன்தினம் இரவு மீண்டும் கொட்டித்தீர்த்தது. இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் பெய்த இந்த மழையால் பல இடங்களில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. சிறிது நேரத்தில் அந்த மழை ஆலங்கட்டி மழையாக மாறியது. இதனால் பல இடங்களிலும் ஆலங்கட்டிகள் குவிந்து கிடந்தன. மழையுடன் சேர்த்து ஆலங்கட்டிகள் கொட்டித் தீர்த்ததில் ஏராளமான ஓட்டு வீடுகள், ஆஸ்பெட்டாஸ் சீட் வீடுகள் சேதம் அடைந்தன.
மேலும் காபிச்செடிகள், இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய் போன்ற செடிகளும் நாசம் அடைந்தன. ஆலங்கட்டி மழையைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக மடிகேரி, சோமவார்பேட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் தங்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டதால் கவலை அடைந்துள்ளனர்.
0 Comments