Tamil Sanjikai

மதுரை அருகே சமயநல்லூர் டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சுண்ணாம்பு பவுடர் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு பிரேமா (25) என்ற மனைவியும், தஸ்மா, சுசித்ரா ஆகிய 2 பெண் குழந்தைகளும், துஷ்யந்த் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

நிருபன் சக்கரவர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்து இருளன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு நிருபன் சக்கரவர்த்தி தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

இதனால் விழித்துக் கொண்ட நிருபன் சக்கரவர்த்தியும், அவருடைய மனைவி பிரேமாவும் எழுந்து வந்து கதவை திறந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட நிருபன் சக்கரவர்த்தி தப்புவதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த அவருடைய மனைவி பிரேமா தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

அவர்களது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, பலத்த வெட்டுக்காயம் அடைந்த நிருபன் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பிரேமாவை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்ததும் சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நிருபன் சக்கரவர்த்தியின் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த படுகொலை தொடர்பாக முத்து இருளன் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

நள்ளிரவில் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment