Tamil Sanjikai

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, நீதிபதி முன்னிலையில் மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை படப்பையைச் சேர்ந்த சரவணன், மாநகரப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரும், இவரது மனைவி வரலட்சுமியும் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கை நீதிபதி கலைவாணன் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சரவணன், மனைவி வரலட்சுமியை நீதிபதி முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டினார். இதில் வரலட்சுமிக்கு கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து சரவணன் தப்பி ஓடவே, வழக்கறிஞர்கள் விரட்டிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சரவணனிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. காயமடைந்த வரலட்சுமி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகமானது, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் சென்னை காவல்துறையின் துணை ஆணையர் தலைமையிலான போலீசாரின் பாதுகாப்பில் உள்ளது. உயர்நீதிமன்றத்துக்குச் செல்பவர்கள், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர். அப்படி இருக்கையில், ஒருவர் கத்தியுடன் உள்ளே சென்றது மட்டுமல்லாமல், நீதிபதி முன்னிலையிலேயே கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பாதுகாப்புக் குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதனிடையே உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு காவல் உதவி ஆணையருக்கு, குடும்ப நல முதன்மை அமர்வு நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.

0 Comments

Write A Comment